Apr 27 2010
நடிகர் அமிதாப் வீடு நாம் தமிழர் அமைப்பின ரால் முற்றுகை
இந்தியச் செய்தி
நடிகர் அமிதாப் வீடு நாம் தமிழர் அமைப்பினரால் முற்றுகை
[ திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2010, 06:45.20 AM GMT +05:30 ]
கொழும்பில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் அமிதாப்பின் முடிவுக்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் அவரது வீட்டை நாம் தமிழர்
இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி நேரில் தங்கள் கோரிக்கையை
வைத்துள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜுன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட
விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர்
அமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார். இவரது மகன், மருமகள்
ஆகியோரும் இந்த அமைப்பில் உள்ளனர்.
இதற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர்
பழ.நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்சே அரசாங்கம்
தலைநகர் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத்
துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது
நடவடிக்கைகளை கைவிட்டு, சக இந்தியரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்
என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் மும்பை ஜுஹூவில் உள்ள நடிகர்
அமிதாப்பச்சனின் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது, அந்த
நிகழ்ச்சிக்கான விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க
வேண்டும் என்று அமிதாப்பச்சன் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்
கொண்டனர்.
அமிதாப்புடன் சந்திப்பு!
போராட்டத்தின் போது அமிதாப்பச்சன் வீட்டில் இருந்தார். போராட்டம் நடந்து
முடிந்த பிறகு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் அமிதாப்பச்சனை
சந்தித்து தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும்
என்று கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை கேட்டுக் கொண்ட அமிதாப், இது பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்.
நாம் தமிழர் அமைப்பின் போராட்டம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக இன்று போராட்டம் நடப்பதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும்
நேற்றே போராட்டம் நடந்து விட்டது