May 20 2010
தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா? லூயிஸ ் ஆர்பர் கேள்வி
http://www.alaikal.com/news/?p=38625
தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா? லூயிஸ் ஆர்பர் கேள்வி
May 20, 2010
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில்
அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் பல
வெளியாகியும், எந்த விசாரணையும் நடத்தாமல் ஐ.நா. சாதிக்கும் மெளனம்,
அந்தப் படுகொலையில் அதற்கும் பங்கிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது
என்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் தலைவர் லூயிஸ் ஆர்பர்
கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக போரின் இறுதி கட்டத்தில் நடந்த
படுகொலைக்கு சிறிலங்க இராணுவத்தின் தலைமையிடமிருந்தே உத்தரவு வந்தது என்ற
ஆதாரம் சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள நிலையில், உலகை உலுக்கிய
அந்தப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா. பொதுச் செயலர்
உத்தரவிடாதது ஏன் என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையராகவும், அதன் பிறகு பன்னாட்டு
குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை குற்றச்சாற்று வழக்கறிஞராகவும்
பணியாற்றியுள்ள லூயிஸ் ஆர்பர், போராளிகளையும், சாதாரண மக்களையும்
பிரித்துபார்க்க மறுத்து தாக்குதல் நடத்தி, பெரும் அளவிற்கு மக்களைக்
கொன்று குவித்த சிறிலங்க அரசின் நடவடிக்கை பன்னாட்டு மனித உரிமை
பிரகடனத்திற்கு விழுந்த பெரிய அடியாகும் என்று கூறியுள்ளார்.
இலங்கைப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான
பன்னாட்டுக் குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று அம்னஸ்டி, மனித
உரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து லூயிஸ் ஆர்பரும் ஐ.நா.வை
நோக்கி குரலெழுப்பியுள்ளார்.
ஊஐகஉஇலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு என்பது
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவை ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்படிபட்ட
விசாரணைக்கு உத்தரவிடாத மகிந்த ராஜபக்ச, “போரில் இருந்து கற்க வேண்டிய
பாடங்கள்” என்ன என்பதை அறிந்து கூறுமாறு, 8 பேர் கொண்ட குழுவை
நியமித்துள்ளார். ஆனால் தங்களுக்கு போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை
நடத்தும் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று அக்குழுவின் உறுப்பினர் ஒருவர்
கூறியுள்ளார்.
அதிபர் ராஜபக்சவின் இந்த நடவடிக்கையை குறித்த சானல் 4 தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்த லூயிஸ் ஆர்பர், “சிறிலங்க அரசின்
கடந்த கால நடவடிக்கைகளை அறிந்த எவரும், போர்க் குற்றங்களுக்கு
பொறுப்பானவர்கள் யார் என்பதை அந்த அரசு கண்டுபிடிக்கும் என்பதை
நம்பமாட்டார்கள். போர் முடிந்தவுடன் சிறிலங்க அரசுக்கு பாராட்டுத்
தெரிவித்த ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை, போர்க் குற்றம் குறித்து
விசாரிக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது தாங்கள் இரகசியமாக
சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் 54 பக்கங்கள் கொண்ட அறிக்கையை
வெளியிட்டுள்ள பன்னாட்டு சிக்கல் தீ்ர்வுக் குழு, இலங்கைப் போரில்
ஐ.நா.வின் நடத்தை குறித்து அது தன்னைத் தானே விசாரித்தறிய வேண்டிய
அவசியம் உள்ளது என்று கூறியுள்ள லூயிஸ் ஆர்பர், “இலங்கைப் போர் குறித்து
ஐ.நா. கடைபிடித்து வரும் மெளனம், அது ராஜபக்ச அரசுடன் இணைந்து
செயல்பட்டதோ என்று ஐயப்பட வைக்கிறது” என்று கூறியுள்ளார்